இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடம் மீனவர் சங்கத்தினர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் உறுதிமொழி வழங்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று மீனவ சங்கத்தினரும் உறவினர்களும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைதுசெய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியில் இந்திரா காந்தி ஆட்சி நடைபெற்ற போது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டமை போன்று மோடி அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டின மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.