நற்பணி இயக்கம் இன்னும் பெரிய சமுதாய நல்வழி (அரசியலில்லாமல்) இயக்கமாக மாறுவதற்கு இன்று கால்கோல் நடபட்டது. அதற்கான ஆயத்தத்தில் முன்னேற்பாடுகளைத்தான் இப்போது உங்கள் மூலமாக ஆரம்பித்துள்ளேன்.
எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நாம் செய்வது மக்கள் அரசியல். வாக்கு அரசியல் அல்ல. வாக்கு அரசியல் சாதி, மதம் பார்க்கத் தூண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன். எனக்கு எந்த சாதியும் மதமும் தேவையில்லை. அதனால் தான், இன்று என்னுடன் அனைவரும் சேர்ந்துள்ளனர்.
நல்லது செய்வதற்கு சாதி மதம் தேவையில்லை. நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருந்தால் போதுமானது. அது உங்களிடத்தில் உள்ளது. அதற்கு உறுதுணையாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
கடந்த 35 வருஷமா என்ன பண்றோம்? நற்பணி தான் பண்றோம். அதை இன்னும் பெரியதாக தொடர்வது எப்படி என்ற ஆலோசிக்கவே இந்த கூட்டம். நாம் செய்யும் நற்பணிகளுக்கு எந்தவித இடையுறும் வரக்கூடாது. அப்படி வந்தால், சட்டம் படித்த இந்த ஆலோசகர்களின் உதவி தேவை. இவர்கள் நமக்கு உதவுவார்கள். அதற்கு அரசியல் தான் களம் என்பது இல்லை. முதலமைச்சராக மாறித்தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை.
நான் படித்த்து எட்டாம் வகுப்பு வரை தான். எனக்கும் சட்டம் தெரியும். ஆனால், சட்டம் படித்த நீங்கள் அதை சொல்லும் போது தான் அதற்கு உரிய மரியாதை கிடைக்கும். நான் அல்லது நற்பணி இயக்கதினரோ, காவலரிடத்தில் பேசுவதற்கும், சட்டம் படித்த நீங்கள் பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது. எனவே, தான் உங்களை அழைத்துள்ளேன்.
உடனே அரசியலுக்கு வா என்கிறீர்கள். அது என்னால் இயலாத காரியம். வரவும் முடியாது. அது என்னுடைய வேலையும் அல்ல. கச்சேரியில் பாட்டு சரியில்லை என்று கூறை கூறுவதால் நீ மேடைக்கு வந்து பாடுன்னு சொல்லலாமா? சமையலில் ஏற்படும் குறைகளை சுட்டிக் காட்டத்தான் முடியும். அதற்காக வந்து சமைத்துப் பார் என்று கூறினால் எப்படி?
நான் அறிக்கைகள் விடுவது புதியதல்ல 30 வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் கருத்து கூறிவருகிறேன். அன்றே இலங்கை பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன். ஆனால் இப்போது தான் நான் கூறுவது அவர்கள் காதில் விழ தொடங்கியுள்ளது.
நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் அரசியலில் தான் உள்ளேன். நான் பண்ணும் அரசியல் ஒட்டு வாங்கும் அரசியல் அல்ல. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல். நான், நீங்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுவேன்.
அதை குறிப்பால் உணர்த்துவேன். அதைத் தான் கடந்த முறையும் செய்தேன். அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இன்று மக்கள் கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
நான் சொன்னால் அது மக்களுக்காகத் தான் சொல்கிறேன் என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு 40 ஆண்டு காலம் தேவைப்பட்டது.
என்னுடைய கட்சி கொடி டெல்லியில் மூவர்ணமாக பறந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நான் காப்பேன். பச்சை தனியாக, வெள்ளை தனியாக, காவி தனியாக கிழிபடுவதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பேன்.
இனி அந்த மாவட்ட பிரச்சனைகளை கையில் எடுப்பேன் அதற்க்கு பக்கபலமாக மாவட்ட சட்ட ஆலோசகர்கள் முன் வரவேண்டும். என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச்சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.
தவறு செய்திருந்தால் தைரியமாக மன்னிப்பு கேட்பேன். ஆனால், செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டேன். உங்கள் பின்னால் நான் இருப்பேன்.
நாம் செய்யும் நற்பணி கண்டு இந்த மாநிலமல்ல பக்கத்து மாநிலமே அழைத்து பாராட்டும் காலம் விரைவில் வரும். செய்வது நற்பணி, அதற்கு ஓய்வில்லை. நற்பணி இயக்கத்தின் மூலம் ரூ. 20 கோடிவரை கடந்த 20 ஆண்டுகளில நற்பணி செய்துள்ளனர். ஆண்டுக்கு 1 கோடி என்றாலும் அது யாராலும் செய்ய முடியாத சாதனை.
நடிகரின் (எனது) பின்னால் வந்தவர்கள்தான் ரூ. 20 கோடி வரை நற்பணி செய்துள்ளனர். இதில் என் பங்களிப்பு 2% இருந்தாலே அதிகம். இது பெரிய அளவில் தொடர வேண்டும். எந்த அரசியல்வாதி தவறு செய்தாலும் நாகரிகமான முறையில் அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள். மரியாதையாக பேசுங்கள்.
35-வருடங்களாக எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்ற நற்பணி, இன்னும் சிறந்த முறையில், பெரிய அளவில் நடைபெறவேண்டும். துணையிருப்பேன் நான்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.