படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை நாளைய தினம் (புதன்கிழமை) நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைக்கவுள்ளார்.
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசாங்கம் இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தே சம்பந்தன் இப் பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.
படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெரும்பாலான காணிகள், பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என குறிப்பிட்டுள்ள சம்பந்தன், உதாரணமான யுத்த காலத்தில் பலாலி விமானப்படைத் தளத்தை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் வலிகாமம் வடக்கில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் 25 வருடங்களுக்கு முன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இம் மக்களில் பெரும்பாலானோர் இன்னும் நலன்புரி முகாம்களிலும் அயலவர்களின் வீடுகளிலும் வாடிக்கொண்டிருக்க, படையினர் அக் காணிகளில் உல்லாச விடுதிகளை அமைப்பதும், விவசாயம், வியாபாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் இரண்டு வருடங்களாக பொறுமை காத்த நிலையில், எவ்வித தாமதமும் இன்றி இம் மக்களின் காணிகளை உடன் கையளிக்குமாறு குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இப் பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.