தமிழகத்தின் தங்கச்சிமடம் என்ற இடத்தைச் சேர்ந்த சுமார் 21 வயது மதிக்கத்தக்க இளம் மீனவர் பிரிட்ஜோ நேற்று முன்தினமிரவு கச்சதீவு கடற்பரப்பில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை – இந்திய கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அச்சமயம் அவர்களை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாகவே இம்மீனவர் கொல்லப்பட்டார் என்று தமிழக மீனவர்களும் இந்திய அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள இலங்கைக் கடற்படை ‘தமது கட்டளைத் தளபதியின் அனுமதியின்றி கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மாட்டார்கள்’ என்று சுட்டிக் காட்டியுள்ளது.
என்றாலும், ‘இது தொடர்பில் விசாரணை நடாத்தப்படும்’ என்றும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு தமது கவலையை வெளியிட்ட போது, ‘இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்’ என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீனவர் பிரிட்ஜோவின் மரணம் தொடர்பில் இராமேஸ்வரம், தங்கச்சிமடம் என்ற இடத்திலுள்ள குழந்தை ஏசு ஆலயத்திற்கு முன்பாகக் கூடிய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தையொட்டி சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
என்ன தான் இருந்தாலும் மீனவர் கொல்லப்பட்டமை மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல்.
கச்சதீவு திருவிழா நடைபெறவிருக்கும் இவ்வேளையில் இச்சம்பவம் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் உணர்வலைகளை ஏற்படுத்தலாம்.
அதனால் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்பட்டு, வேதனைக்கு உள்ளாகியுள்ள அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.
அதேநேரம் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பிரச்சினை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றே கோரி வருகின்றனர்.
அதாவது தமிழக மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதும், அவர்கள் பயன்படுத்தும் சட்ட விரோத மீன்பிடி முறைகளும்தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளன.
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடிக்கின்றனர்.
அவர்கள் ‘பொட்டம் ரோலிங்’ என்ற இழுவை மீன்பிடி முறைமையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த முறையின் மூலம் பெரிய மீன்கள் மாத்திரமல்லாமல் சிறிய குஞ்சு மீன்கள் கூட வடிகட்டிப் பிடித்து அள்ளிச் செல்லப்படுகின்றன.
அத்தோடு இவர்கள் பயன்படுத்தும் இம்மீன்பிடி முறைமையால் இப்பிராந்தியத்தில் மீன்கள் இனவிருத்தி மேற்கொள்ளும் முருகைக்கல் பாறைகளும் பெரிதும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக இப்பிராந்தியத்தில் மீன்களி-ன் பெருக்கம் குறைவடைந்து வருவதாகவும், அதனால் காலப் போக்கில் இப்பிராந்தியத்தில் மீன்வளம் அருகி விடக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கையின் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இந்நாட்டு மீனவர்களது வலைகளை சேதப்படுத்துவதாகவும், சில சந்தர்ப்பங்களில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை எடுத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
தமிழக மீனவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் இலங்கை மீனவர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழக மீன்பிடித் துறையில் சில தமிழக அரசியல்வாதிகளும், பெரும் செல்வந்தர்களும் முதலீடு செய்துள்ளனர்.
அவர்கள் மீன்வளத்தின் எதிர்காலம் குறித்து சிறிதளவேனும் சிந்திப்பவர்கள் அல்லர்.
மாறாக ஒரே நாளில் முழு லாபத்தையும் பெற்றுக் கொள்வதே அவர்களது நோக்கமாக உள்ளது.
அதன் காரணத்தினால்தான் தமிழக மீனவர்கள் சர்வசாதாரணமாக அத்துமீறி மீன்பிடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் விளைவாகத் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பல மட்ட பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளது.
அவற்றில் இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை, அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை, அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை என்பன குறிப்பிடத்தக்கவை.
இருந்த போதிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இலங்கை அதிக அக்கறையோடு செயற்படுகின்றது.
ஆனாலும் இந்தியத் தரப்பினர் இவ்விவகாரம் தொடர்பில் செலுத்துகின்ற அக்கறையை மேலும் அதிகரிப்பார்களாயின் இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக் காண அவ்வளவு காலம் எடுக்காது என்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது.
ஆகவே இரு நாட்டு மீனவர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
அதன் மூலம் இவ்வாறான தேவையற்ற மரணங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.