யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோத்தாபாய ராஜபக்ஷவினால் இராணுவத்தினரை கொண்ட தனியான குழுவொன்று செயற்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அந்த குழுவே கொழும்பில் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தனியான குழுக்களை வைத்து இயக்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களினூடாகவே கொழும்பில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றன. யுத்தத்தின் போது இராணுவ தளபதியையும் மீறி கட்டளைகளை பிறப்பித்தனர்.
லசந்த விக்கிரமதுங்க கொல்லப்படுவதற்கு முன்னர் தான் மிக் விமானம் கொள்வனவு தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக கூறியிருந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் இராணுவ தளபதியாக இருந்தவர் என்ற ரீதியிலும் மற்றும் கொழும்பில் தான் என்ன பணியில் ஈடுபட்டிருந்தேன் என்பது தொடர்பாகவும் விசாரணையின் போது என்னிடம் கேட்கப்பட்டுள்ளது. இதன்படி எனக்கு தெரிந்தவற்றை நான் வெளியிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.