கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து பதுளை, துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளானதற்கு சாரதியே காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக சாரதி மாணவர்களிடம் கூறியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
இருப்பினும், பேருந்து சாரதி தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் பிரேக் செயலிழந்ததா அல்லது அதிவேகமாக வாகனம் செலுத்தியதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் உடல்நிலை
கடந்த 1ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 மாணவர்கள் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு இருந்த ஆபத்து தற்போது மறைந்துவிட்டதாகவும், நேற்றைய நிலவரப்படி அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில் சிலர் நேற்று பொது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.
இறுதிக்கிரியைகள்
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் மரணத்திற்கு தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த பாதிப்பே காரணம் என தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் (03) மகா சங்கரத்தினத்தின் சமய அனுஷ்டானங்களின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கும் மத்தியில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.