பெங்களூரு கப்பன் பேட்டை அருகே வசித்து வந்தவர் கிரண் (வயது 24). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு உடல் எடை அதிகமாகி பருமனாக இருந்தார். இதனால் அவர் தனது உடற்கட்டை மெருகேற்ற முடிவு செய்தார். மேலும் ‘சிக்ஸ்பேக்‘ உடலுக்கு மாற தீர்மானித்தார்.
இதற்காக கிரண் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உடற்பயிற்சி மையத்திற்கு சென்று தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் உடற்கட்டில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. அவர் நினைத்தபடி ‘சிக்ஸ்பேக்‘ உடலும் வரவில்லை.
இதனால் உடற்பயிற்சி மையத்தில் பணியாற்றும் பயிற்சியாளரிடம் தனக்கு ‘சிக்ஸ்பேக்’ உடலமைப்பு வேண்டும் என்று கிரண் கூறினார். இதையடுத்து பயிற்சியாளர் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் ஊசி மருந்தை கிரண் உடலில் செலுத்தினார்.
அந்த மருந்து செலுத்தப்பட்ட பின்பு கிரணின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் உடலில் ரத்த ஓட்டம் குறைந்து கொண்டே சென்றது. பின்னர் மூளைச்சாவு அடைந்து நேற்று கிரண் பரிதாபமாக இறந்தார்.
கிரண் உடலில் செலுத்திய ஊசி மருந்து குதிரைகளுக்கு போடப்படும் மருந்தாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இது பற்றி ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.