ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை கொண்டு சென்றார்கள் என எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்கத்தை எமக்கு ஏற்படுத்தியிருந்தன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலுக்கு தயார்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு சிறந்த பாடத்தைக் கற்பித்தார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.
எம்மில் காணப்பட்ட குறைபாடுகள், தவறுகளை திருத்திக் கொண்டு தற்போது பயணிக்க ஆரம்பித்துள்ளோம். புத்துணர்ச்சியுடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.
மக்கள் எமது வேலைத்திட்டங்களை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அவர்கள் வழங்கும் தீர்ப்பிற்கமைய நாம் எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்.
ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டு
எமது அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ராஜபக்சக்கள் உகண்டாவிற்கு விமானம் மூலம் டொலர்களை கொண்டு சென்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், டொலர்கள் இன்மையினாலேயே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் வரிசையும் ஏற்பட்டது என்பதை பலரும் அறிந்திருந்தனர்.
ராஜபக்சக்களால் தான் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்பட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் இன்று அமைதியாகவுள்ளனர்.
எனவே பொய்களால் தாம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றோம் என்பதை இப்போதாவது மக்கள் உணர வேண்டும். பொதுத் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.