“வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உயர்ந்த இடத்துக்கு போகிறார்களா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் போக வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைமைக்கு வருவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முன்னணி கதாநாயகியாக உயர வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக உழைத்தேன். தற்போது என்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.
முதல் படத்தில் வெற்றியை கண்ட பல கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் எனது முதல் படம் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. அனைத்து படங்களுமே நன்றாக ஓடின. இதனால் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு வந்து விட்டேன்.
எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். ஏன் நடிக்க கூடாது? மற்ற துறைகளில் இருக்கும் பெண்கள் திருமணத்துக்கு பிறகும் அவற்றில் தொடர்கிறார்கள். நடிகைகள் மட்டும் சினிமாவில் எதற்காக நீடிக்க கூடாது? திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.
நான் சினிமாவில் உயர கடினமாக உழைத்தேன். சினிமாவில் மட்டுமே பெயரும் புகழும் வேகமாக வந்து சேர்கிறது. வேறு எந்த தொழில்களிலும் இதுபோல் இல்லை. ஆனாலும் சினிமாவில் கிடைக்கும் புகழ் நிலையானது என்று நினைத்துக்கொள்ள கூடாது. நடிகர்-நடிகைகளின் கதாபாத்திரங்கள் எப்படி கற்பனையானதோ அதுமாதிரிதான் இதுவும். தங்களுக்கு கிடைக்கும் பெயர், புகழ் நிரந்தரம் இல்லை என்பதை நடிகர், நடிகைகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை மனதில் வைத்துதான் நான் சினிமாவில் எனது இடத்தை பற்றி யோசிப்பது இல்லை.”
இவ்வாறு சமந்தா கூறினார்.