தாய்மை ஒரு பெண்ணின் வாழ்வை முழுமையடைய செய்கிறது. குழந்தையை பெற்றெடுக்கும் தருணம் முதல் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி அவன் ஆசைகளை நிறைவேற்றி அவன் வாழ்வில் வெற்றி பெறுவதை காணும் வரையில் அவள் தாய்மை உணர்வு சிறு அளவும் குறைவதில்லை.
அத்தகைய தாய்மையை பெற்ற பின் பெண்கள் தங்கள் உடல் நலத்தையும் பேணி பாதுகாப்பது வேண்டும். ஏனெனில் குழந்தையை பேணி பாதுகாக்கும் பெண்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறை கொள்ளாது பலவிதப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த பின் அவளுக்கு ஏற்படும் உடல் சத்து இழப்பு மற்றும் உடல் பலகீனம் போக்கவும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்து பெறவும் முறையான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பிரச்சினைகளை களைய முடிவதுடன், நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தையை பராமரிக்கவும் முடியும். அருந்தவம் பெற்று அன்னையாய் மாறிய பின் நலம் தரும் ஊட்டச்சத்து உணவே அவர் நலம் பேணும் என்பதே உண்மை.
பிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்ற உணவுகள் :
பிரசவத்திற்கு பின் தாயானவள் பல மாறுதல்களை அதாவது உடல் ரீதியாக, மன ரீதியாகவும் அடைகிறாள். எனவே அதற்கேற்ப தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். குழந்தையை தாயும், அவளது உற்றார் உறவினர்களும் கனிவுடன் கவனிப்பது போல், தாயையும் நல்ல ஓய்வெடுக்க செய்து, ஊட்டச்சத்து உணவுகளை அளித்து பாதுகாத்திட வேண்டும்.
உணவுகள் என்பது குழந்தைக்கு தாய்ப்பாலை பெருக்கு விதமாகவும், பிரசவ வலி மற்றும் காயங்கள் சீக்கிரமே ஆறும் விதத்திலும் அமைந்திட வேண்டும். பெரும்பான்மையான மருத்துவர்கள் பிரசவித்த தாய்மார்கள் பசிக்கின்ற போது எல்லாம் உணவுகளை உட்கொள்வது அவசியம் எனக் கூறுகின்றனர்.
புரத சத்துள்ள உணவுகள் :
ஒரு நாளைக்கு 3 முதல் நான்கு அவுன்ஸ் அளவு புரத சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் நான்கு அல்லது ஐந்து முறை பால் பொருட்களையும் உட்கொள்ளுதல் வேண்டும். பால் பொருட்கள் புரதச்சத்தை தருவதுடன் கூடுதலாக கால்சியம் சத்தை பெறவும் உதவி புரிகின்றன. ஆட்டிறைச்சி, கோழி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், கொட்டைகள், விதைகள் போன்றவைகளை எடுப்பதன் மூம் தேவையான புரதசத்தை பெற முடியும்.
அதுபோல் விட்டமின் பி-12 அளவும் சரியான அளவு இருந்திட வேண்டும். இந்த பி-12 சத்து குறைவின் மூலம் சோர்வு, எடை குறைவு, வாந்தி போன்றவை ஏற்படும். இந்த விட்டமின் பி-12 இறைச்சியில் அதிகமாக உள்ளது. மருத்துவர்கள் பி-12 ஊட்டச்சத்து மருந்துகளையும் பரிந்துரை செய்கின்றனர்.
இரும்பு சத்து உணவுகள் :
சில பெண்கள் பிரசவித்த பின் மிகவும் தளர்வாகவும், சோகையாகவும் காணப்படுவர். இதற்கு இரும்பு சத்து குறைவுதான் காரணம். இதற்கு ஏற்ப விட்டமின் சி சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு, போன்றவைகளில் இவும்பு சத்து அதிகமாக உள்ளது. மஞ்சள் கரு, இறைச்சியிலும் இரும்பு சத்து உள்ளது. கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் சேர்த்து உணவுகளையும் உட்கொள்ளலாம்.
பச்சைக்காய்கறிகள் பழங்கள் :
காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் மற்றும் விட்டமின் ஊட்டச்சத்துக்களை கொண்டதாக உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மூலம் பொதுவாக பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கலாம். ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, ப்ளு பெர்ரி, அன்னாசி, பட்டாணி, போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் தரும் அற்புத தீர்வு :
மஞ்சளில் விட்டமின் பி-6 மற்றும் விட்டமின் சி உள்ளது. மேலும் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளது. இதனை சாதாரணமாக உணவில் சேர்த்து கொள்வோம். இது உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். பிரசவத்திற்கு பின்னர் வயிறு பிரச்சினை மற்றும் காயங்கள் ஆற மஞ்சள் பெரிதும் உதவுகிறது. ஒரு டம்ளர் சூடான பாலில் ½ டிஸ்பூன் நல்ல மஞ்சள் தூளை கலந்து அருந்தலாம். நல்ல பலன் உண்டு.