பரபரப்பான வாழ்க்கைமுறை, மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் காரணமாக ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் சைனஸ் ஆகிய உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன. உணவுப் பழக்கத்தை முறைப்படுத்திக்கொள்வதன் மூலமாக இந்த ஒவ்வாமை நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.
சரியான நேரத்தில், சரியான அளவில், சரியாண உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உண்ணும்போது கவனம் சிதறாமல் அதை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது பேசுவதையும் தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது அதிக அளவில் தண்ணீர் குடிப்பது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இரவு நேரங்களில் மிகவும் கால தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இரவு நேரத்தில் மனித உடலின் செரிமானத் திறன் குறைவாக இருக்கிறது. காலம் தாமதமாக சாப்பிடும்போது உணவு செரிக்காமல் உடலில் தங்கி நோய்களை உண்டாக்குகிறது. அறுசுவை உணவு உடலுக்கு நல்லது. கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உணவில் அவசியம் இடம்பெற வேண்டும். அவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புகளில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் நமது முன்னோர்கள் துவர்ப்புச் சுவையுள்ள சுண்டல்காயை வற்றலாக உணவில் சேர்த்துக்கொண்டார்கள். அதைப்போல சில உணவுகளை ஒரேநேரத்தில் சாப்பிடக்கூடாது. மீன் உணவோடு கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது. தயிரோடும் கீரைகளை சேர்த்துக்கொள்ளக்கூடாது.
உணவில் அறுசுவையும் இடம்பெற்றிருந்தால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநலையில் இருக்கும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அளவு பிசகினாலும் அது நோயை உருவாக்கும். பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். தூங்கும்போது ஆண்கள் இடதுபுறமாகவும் பெண்கள் வலதுபுறமாகவும் சாய்ந்து படுக்க வேண்டும். நுரையீரல் முழுமையாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு ஓய்வு தேவை. இரவு நேர தூக்கத்தின்போது நுரையீரலுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது. இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை என்றால், நுரையீரலின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும்.
வாரம் இரு தடவை உடலில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சுடுநீரில் மட்டுமே குளிக்க வேண்டும். இவ்வாறு உடலை சரிவர பராமரிப்பதாலும் உணவு முறையில் ஒழுங்குமுறையை பின்பற்றுவதாலும் நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.