வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இது படிப்படியாக நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக மாறுகிறது.
இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அப்போது மேலும் வலுப்பெற்று அது புயலாக விசுவரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உருவானால் அதற்கு ‘பீன்ஜல்’ என பெயர் சூட்டப்படலாம்.
இதைத் தொடர்ந்து வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை முதல் வருகிற 28ஆம் திகதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும்.
மேலும் கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்ககடல் முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் வருகிற 29ஆம் திகதி வரை மிதமான மழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழையை பொறுத்த வரை சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் 26 முதல் 28ஆம் திகதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும், கடலூர் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 26ஆம் திகதியும் பலத்த மழை பெய்யும்.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.