இலங்கையின் பல நீர்த்தேக்கங்கள், பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் அதன் எல்லை மட்டத்தை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலையில் தேதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 32,145 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நில மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கம்
இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 3,520 கன அடியும், கவுடுல்ல நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும், யான் ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 6,099 கன அடியும், பராக்கிரம சமுத்திரத்தில் இருந்து வினாடிக்கு 5,046 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களம்
இதேவேளை, மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றத்தின் வேகம் மேலும் அதிகரிக்கலாம். எனவே, தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது குறித்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.