சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் எனவும், கடந்த 2015ஆம் ஆண்டு பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமெனவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் ஜெனிவாவில் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவினால் நேற்றையதினம் (செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை குறித்த நகல்வரைபு தொடர்பான உபகுழுக் கூட்டத்திலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இக்கூட்டத்தில், பிரித்தானியா உள்ளிட்ட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச பங்களிப்புடன் இலங்கை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது பங்குபற்றியிருந்த இலங்கைத் தூதுக்குழுவின் பிரதிநிதி, அறிக்கையினை முழுமையாக ஆராய்ந்தறிந்தே இலங்கை அரசாங்கம் பதிலளிக்குமெனவும் பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பிரேரணையானது வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அனைத்து நாடுகளின் அனுசரணையுடன் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கும் சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.