போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் இலங்கையில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும், போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழக்கும் சிறப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கை அரசு அக்கறை காண்பிக்கவில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல்ஹுஸைன் தெரிவித்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தமது கால அவகாச கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியிருக்கின்றது. ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது கூட்டத் தொடரில் கால அவகாசக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான இரண்டு வருட கால அவகாசத்தை மனித உரிமை ஆணைக்கழு வழங்கும் சமிக்ஞை கிடைத்துள்ளது.
இதன்படி, 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விரிவான இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும், பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிப்பார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுப்பதற்கான, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் மீது நம்பிக்கையீனத்தையே கொடுத்துள்ளது. ‘கால தாமதமாக வழங்கப்படும் நீதியானது, மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது’ என்று கூறப்படுவதுண்டு. இதே கதைதான் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
போர்க்குற்றங்காளலும், மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களாலும் பாதிக்கப்பட்ட தரப்பாக இலங்கைத் தமிழ்மக்கள் இருந்தபோதும், தமிழ் மக்களுக்கு நியாயமோ, அதற்கான பரிகாரமோ கிடைப்பதற்கான எந்த சமிக்ஞையையும் காணமுடியவில்லை. அதை வழங்கும் விருப்பத்தையும் இலங்கை அரசிடம் காணமுடியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசு மீதான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டிருந்தாலும், அதற்கான அழுத்தத்தைக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச நாடுகள், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அக்கறையைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், சர்வதேச நாடுகள் இலங்கை அரசை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே கையாளும் என்பதையும் உணர்த்துவதாகவே கால அவகாசம் வழங்கும் தீர்மானம் அமைந்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணைக்கழுவின் தீர்மானத்தை அமெரிக்காமுன்மொழிந்தபோது, அதற்கு அனுசரனை வழங்கி நிறைவேற்றி சர்வதேச நாடுகளிடையே நல்லபிள்ளையாக நடித்த இலங்கை அரசாங்கம், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதுநாள்வரை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கெர்ளவி;ல்லை என்ற விசனம் தமிழ் மக்களிடையே இருக்கவே செய்கின்றது.
ஒருவேளை மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஆட்சியிலிருந்திருந்தால், போர்க்குற்ற விசாரணையும், மனித உரிமைகள் மீறல்களும் முதன்மைப் பிரச்சினைகளாக இருந்திருக்கும். இலங்கையில் வாழும் தமிழ்மக்களும்;, புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளும் தாம் வாழும் நாடுகளிலும், ஐ.நா முன்றலிலும் நியாயம் கேட்டுப் போராடியிருப்பார்கள்.
தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப்போய்விட்டது. புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகள் போராட்டங்களை தொடர முடியாதவகையில் களைத்துப்போய் விட்டார்கள். சர்வதேச சமூகத்தை, அழுத்த சக்தியாகப் பயன்படுத்தி தமிழர்களுக்கு நியாயத்தையும், பரிகாரத்தையும் பெற்றுத் தருவதாகக் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது இலங்கை அரசின் இணக்கச் சக்தியாகி மௌனித்துவிட்டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சிலர் மனித உரிமை ஆணையகம், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். ஆனால் கூட்டமைப்பின் தலைமைகள் என்று கூறுகின்றவர்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்கள்.
இவ்வாறு தமக்குள்ளேயே இரண்டு நிலைப்பாட்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்ததே தவிர, போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் வலியுறுத்தவில்லை.
தமிழ்மக்கள் இலங்கையில் தனி நாடு கேட்டு இரத்தமும் சதையுமாகப் போராடிய நிலைமை மாற்றமடைந்து தற்போது, போராட்ட காலத்தில் படையினர் அபகரித்த தமது சொந்த நிலத்தைத் திருப்பித் தாருங்கள் என்று வீதியில் குடும்பம் குடும்பமாக நின்று போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகள், ஓரணியாக திரள்வதற்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டியில் துண்டாடப்பட்டவர்களாக பிரிந்து நிற்கின்றார்கள். இதேநிலைமை தொடருமாக இருந்தால், 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்கும் சூழலும் இல்லாமல் போகலாம்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ‘ஜனாதிபதியைக் கேளுங்கள்’ என்ற பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் சந்திப்பு அலுவலகம் ஒன்றை திறந்து வைப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது உரையாற்றுகையில் ‘தன்னை ஐந்து தடவைகளுக்கு மேலாக கொலை செய்வதற்கு புலிகள் முயற்சி செய்திருக்கின்றார்கள்’ என்று கூறியதுடன் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த முப்படைகளையும் குற்றவாளிகளாக நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
ஜனாதிபதி எந்த இடத்தில் இருந்து உரையாற்றுகின்றாரோ, அந்த இடத்தில் இருப்பவர்களை திருப்திப்படுத்தும் கருத்தையே தெரிவிப்பார். இதே ஜனாதிபதியை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற விட்டிருந்தால், குற்றங்கள் விசாரிக்கப்படும் என்றும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருப்பார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கருத்தில் நிலையில்லாதவராக இருந்தாலும், தென் இலங்கை அரசியல் தலைமைகளின் மனோ நிலை அதுதான் என்பதையே நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த அசமந்தப்போக்கை எதிர்கொண்டு, நியாயத்தையும், பரிகாரத்தையும் பெற்றுக்கொண்டு தமிழ் இனம் சமத்துவத்துடன் இலங்கையில் வாழ்வதற்கு அறிவுபூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் போராடவேணடிய தேவையை தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.