பத்ர் போரின் தொடக்கத்திலேயே குதிரை வீரர்களான ரபிஆவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், தளபதி அஸ்வத்தையும் குறைஷிகள் இழந்து நின்றனர். இதனால் அவர்கள் முஸ்லிம்களின் மீது கட்டுக்கடங்காத கடுங்கோபத்துடன் பாய்ந்தனர். முஸ்லிம்கள் ‘அல்லாஹ் ஒருவனே, அஹ்த்! அஹ்த்!’ என்று சொல்லிக் கொண்டே எதிரிகளை எதிர்கொண்டனர்.
“இந்தப் போரில் சகிப்புத் தன்மையுடனும், நன்மையை மட்டும் எதிர்பார்த்தும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழுந்து தயாராகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) கூறி, போருக்கு ஆர்வமூட்டினார்கள்.
அதற்கு உமைர் பின் அல்ஹுமாம் அல் அன்சாரி (ரலி) “ஆஹா, சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார். அதற்கு நபிகளார் “நீங்களும் சொர்க்கவாசிகளில் ஒருவர்தாம்” என்று கூறினார்கள். உமைர் அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, உண்ணத் தொடங்கியபடி “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும் வரை நான் உயிர் வாழ்ந்தால் அதுவேயொரு நீண்ட வாழ்க்கையாகிவிடுமே!” என்று கூறியபடி எதிரிகளை நோக்கிச் சென்று அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார்.
போர் சூடுபிடித்தபோது, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார்கள். “யா அல்லாஹ்! நீ எங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவாயாக. உன்னை நம்பி வந்த கூட்டத்தை இழந்துவிட்டால் உன்னை வணங்க இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். உன்னை நம்பி வந்தவர்களைக் கைவிட்டுவிடாதே” என்று கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தார்கள்.
இறைத்தூதரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். “அணி அணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று அருளிய இறைவன், மலக்குகளை நோக்கி, “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஸ்லிம்களை உறுதிப்படுத்துங்கள். நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன், நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள், அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”
வானவர்கள் முஸ்லிம்களுக்குப் பின்னாலிருந்து உதவிபுரிந்தனர். முஸ்லிம்களை இறைவன் பலப்படுத்தினான். ஆயுதமில்லாத முஸ்லிம்கள் கற்களை ஆயுதமாக்கி, “முகங்கள் மாறட்டும்” என்று பொடிக்கற்கள் நிறைந்த மண்ணைப் படை எதிரிகளின் முகத்தில் எறிந்தனர்.
“பத்ரு போரில் எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான்; பகைவர்கள் மீது மண்ணை நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் செவி ஏற்பவனாகவும், எல்லாம் அறிபவனாகவும் இருக்கின்றான்.
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” என்று இறை வசனங்களே முஸ்லிம்களின் வெற்றிக்கு சாட்சியானது.