எமது நாட்டிற்கு பெண்களின் பங்களிப்பானது விலைமதிக்க முடியாததொன்றாகும் எனினும் துரதிஷ்டவசமாக எமது சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பெண்கள் ஒடுக்கப்படுதலுக்கும், துன்புறுத்தலுக்கும் மற்றும் கொடுமைகளுக்கும் முகங் கொடுக்கிறார்கள் என எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும்,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த செய்தியை வழங்குவதையிட்டு கௌரவமும், பெருமிதமும் கொள்கிறேன்.
எமது நாட்டிற்கு பெண்களின் பங்களிப்பானது விலைமதிக்க முடியாததொன்றாகும். எனினும் துரதிஷ்டவசமாக எமது சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பெண்கள் ஒடுக்கப்படுதலுக்கும் இதுன்புறுத்தலுக்கும் கொடுமைகளுக்கும் முகங் கொடுக்கிறார்கள்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத போராட்டத்தில் அதிகம் பாதிப்பிற்குள்ளானவர்களாக பெண்கள் காணப்படுகிறார்கள். யுத்தமானது அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிர்களை காவு கொண்டதுடன், அநேகரை விதவைகளாக்கியத்துடன் அவர்களது வாழ்வாதாரங்களையும் இல்லாமற் செய்தது.
இதற்கும் மேலாக இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் காணாமற்போன தமது அன்புக்குரியவர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் பெண்களை வலுவற்றவர்களாகவும், துஸ்பிரயோகத்திற்கும் அவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாவதற்கும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதற்கு பாதிப்பாகவும் உள்ள இந்த விடயம் தொடர்பில் அவசரமான கவனமும் நடவடிக்கைகளும் தேவையாகவுள்ளது.
பெண்களின் வகிபாகத்தையும் அவர்கள் எமது நாட்டிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையும் கொண்டாடும் இவ்வேளை, மக்களாகிய நாம் அனைவரும் பாலின சமத்துவத்தையும், சம நீதியையும், உறுதி செய்வதோடு இலங்கையில் வாழும் அனைத்து பெண்களின் சுய கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாகும்.
அதைப்போலவே புதிய அரசியலமைப்பானது, இந்த அபிலாஷைகளை உள்ளடக்குவதோடு, சமுதாயத்தின் எல்லா கோணங்களிலும் பெண்களுக்கு அதிகளவு பாதுகாப்பையும் வலுவூட்டலையும் உறுதி செய்யவும் வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்.
எமது நாட்டின் வரலாற்றின் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நாம் பிரவேசித்துள்ள இத்தருணத்தில், நிலைமாற்று நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, இந்த செயன்முறைகளில் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.
இறுதியாக, செழிப்பும் முன்னேற்றமுமான நாட்டினை நோக்கி பெண்கள் வழங்கிய அதீத பங்களிப்புகளை வரவேற்பதோடு, எமது நாட்டின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் தொடர்ந்தும் அயராது பங்காற்ற வேண்டும் என அனைத்து பெண்களிற்கும் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.