திருச்சியில் இன்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட மீத்தேன் திட்டத்திற்கு வேறு ஒரு உருவம் கொடுத்து அதனை ஹைட்ரோ கார்பன் திட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு பல்வேறு கட்ட போராட்டம் மூலம் தடை பெற்றோம்.
அரபு நாடுகளில் பாலைவன பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் இயற்கை எரிவாயு திட்டம் தமிழகத்திற்கு தேவையற்றது. அதிலும் இயற்கை எழில் நிறைந்த, வேளாண் மண்டலமாக கருதப்படும் நெடுவாசல் கிராமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை. உடனே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
இந்த திட்டம் வந்தால் வேளாண்மை பாதிக்கும், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு இந்த திட்டத்தை அனுமதிக்காது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாது என்று கூறியிருப்பது ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. ஆனாலும் மத்திய அரசு இதனை உறுதிப்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க.வை அழிக்க பெரிய சதி நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் முதலில் இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். பின்னர் அவர்கள் இணைந்து செயல்படவில்லை. அவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது யார்? அவர்கள் பிரிவும் அ.தி.மு.க.வை அழிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. எல்லை மீறி வந்தால் இலங்கை அரசு கைது செய்து வழக்கு தொடரலாம். ஆனால் சுட்டுக்கொல்லும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்?
ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக இருந்த போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு தற்போது நீதி விசாரணை நடத்தக்கோரி உண்ணாவிரதம் இருப்பதில் மர்மம் உள்ளது.
மேலும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம், ஓ.பி. எஸ். அணிக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு மரியாதை உள்ள இடத்தில் மட்டுமே நான் இருப்பேன் என்றார். அதேபோல் ஆர். கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.