நடிகர், நடிகைகள் தங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கங்களை தொடங்கி, அதில் தங்களது படங்கள் மற்றும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இது அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்மை என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் அவர்களுக்கு எதிராக திரும்பக்கூடிய நிலைமையும் ஒருசில நேரங்களில் நேர்ந்துவிடுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் சூடுபிடித்திருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, திரிஷாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. திரிஷாவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
கடைசியில், திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர் ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாகவும், அதில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த கருத்துக்களை திரிஷா பதிவு செய்யவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. இதன்பிறகே, திரிஷா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது.
அதேபோல், தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிவந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது. இறுதியில் பார்த்தால் அவருடைய டுவிட்டர் பக்கமும் யாரோ ஒருவரால் ஹேக்கிங் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, அந்த பக்கம் தற்போது மூடப்பட்டு விட்டது.
இந்நிலையில், தற்போது இதேபோன்ற பிரச்சினையில் மடோனா செபஸ்டியானும் சிக்கிக் கொண்டுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹேக்கிங் செய்தவர் இதுவரை அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான பதிவும் போடவில்லை என்பது சந்தோஷமான ஒன்று. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக மடோனா செபஸ்டியான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான கருத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார்.