இந்தியப்பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
தீவொன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கையர்கள்
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.
ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
சுமார் மூன்று ஆண்டுகளாக அவர்கள் அனைவரும் அந்த தீவிலேயே அடைபட்டிருந்தார்கள்.
குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் உடல் ரீதியான வன்முறைகளுக்கும் ஆளாக, சிறு பிள்ளைகளுக்கு சரியான பாதுகாப்பின்றி, அவர்களும் அவர்களைக் குறித்து அவர்கள் பெற்றோரும் அச்சத்துடனேயே வாழ்ந்துவந்தார்கள்.
ஒரு நல்ல செய்தி
இந்நிலையில், Diego Garcia தீவில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
ஆறு மாதங்களுக்கு அவர்கள் பிரித்தானியாவில் தங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் நிதி உதவியும் செய்ய உள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அந்த இலங்கைத் தமிழர்களில் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களும் இன்று பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட உள்ளார்கள்.
என்றாலும், மூன்று பேர் மீது மட்டும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து Diego Garcia தீவிலேயேதான் வைக்கப்பட்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.