மனித உடலின் தன்மை, மரபணு காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உடலை 3 வகைகளாக பிரிக்கிறார்கள், உடலியலாளர்கள். மனித உடல் எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான 3 பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும். அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப உடற்பயிற்சிகளையும் பரிந்துரை செய்கிறார்கள். எக்டோமார்ப், எண்டோமார்ப், மெசோமார்ப் என்பனதான் அந்த 3 வகைகள். இந்த 3 வகை மனிதர்களும், 3 வகையான உடல்வாகுகளை கொண்டவர்கள்.
இதில் எக்டோமார்ப் வகை மனிதர்கள் உயரமாக இருப்பார்கள். நீண்ட கால்களும், சதைப்பற்றில்லாத மார்பு பகுதியையும், முன்னோக்கி சாயும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் குண்டாக இருக்கமாட்டார்கள். நீண்ட நேரம் நிற்கக்கூடியவர்கள்.
உடல்திறன் அதிகம் கொண்ட தடகளப்போட்டிகள், நீச்சல், சைக்கிள் போட்டிகளுக்கு பொருத்தமாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மூட்டுகளை அதிகம் அசைக்கும் விதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். சதைப்பகுதிகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் இவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக வரமுடியும் என்கிறார்கள்.
அடுத்தது எண்டோமார்ப் வகை மனிதர்கள். இவர்கள் அப்படியே எக்டோமார்ப் வகை மனிதர்களுக்கு நேர் எதிரானவர்கள். இவர்கள் உயரம் குறைவாகவும், வயிற்று பகுதியில் அதிக சதைப்பிடிப்புடன் இருப்பார்கள். இவர்கள் உடலின் உணவு ஜீரண உள் இயக்கம் மெதுவாக நடப்பதால் உணவின் கொழுப்புச்சத்து எளிதாக உடலில் தங்கிவிடுகிறது. அதனால் மிக எளிதில் எடை அதிகமாகி, உடல்பருமனாகிவிடுவார்கள்.
இவர்கள் உடல் வலிமை அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட முடியும். உடலின் கூடுதலான சதைப்பிடிப்பு இந்த விளையாட்டுகளுக்கு உதவும். இவர்கள் மூச்சு சம்பந்தமான பயிற்சிகள் அதிகம் செய்தால் நன்மை கிடைக்கும். அதிதீவிரமான உடற்பயிற்சிகள் வேகமாக செய்ய வேண்டும். கடினமான உடற்பயிற்சிகளை செய்வதே இவர்களுக்கு நல்லது.
3-வது வகையினர் மெசோமார்ப். இவர்கள்தான் நல்ல உடலமைப்பு கொண்டவர்கள். இவர்கள் எந்த பெரிய முயற்சியும் செய்யாமலேயே ஒரு விளையாட்டு வீரராக வரமுடியும். இவர்கள் உடலமைப்பு கச்சிதமான சதைப்பற்றுடன் நேர்த்தியாக இருக்கும். இவர்கள் எதை செய்தாலும் சிறப்பாக செய்வார்கள். இவர்களுக்கு எல்லா வகை உடற்பயிற்சிகளும் ஒத்துப்போகும். இவர்களே சிறப்பான உடலமைப்பு கொண்ட வகையினர்.
மனிதர்கள் அவரவர்களின் உடல்வாகுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் தரும் என்கிறார்கள், உடலியலாளர்கள்.