வடமாகாணத்தில் எச்1.என்1. வைரஸ் தொற்றின் மூலம் 384 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் 64 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் 57 பேர் இனங்காணப்பட்டுள்ள போதிலும், 8 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 2 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 6 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 244 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 37 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இறுதியாக யாழ்.மாவட்டத்தில் 47 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன் மொத்தமாக 384 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 64 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நோயின் தாக்கம் அச்சுறுத்தலாக கருதப்படவில்லை.
இருந்தும், சிறு பிள்ளைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய் மார்கள், அவதானத்துடன் செயற்படுமாறும், தொண்டை நோயுடன் கூடிய தடிமன் காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியரை நாடுமாறும், விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் வடமாகாண சுகாதார அமைச்சர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.