இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில், இந்தியராக நாம் எக்ஸ்ட்ராவாக மகிழ்ச்சி அடைய ஒரு விஷயம் இருக்கிறது. ஐ.நா சபையின் இன்றைய மகளிர் தினம் நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடவிருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷ், பல திறமைகள் கொண்டவர். திரைப்பட இயக்குநர், சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர். ஐ.நா சபையின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா வில் நடனமாகப் போகும் முதல் தமிழ்ப் பெண் எனும் பெருமையைப் பெறுகிறார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் தனது பரதநாட்டியக் குழுவுடன் புஷ்பாஞ்சலி, நடராஜர் ஆராதனை ஆகியவற்றோடு கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அவசர தாலாட்டு’ பாடலுக்கும் நடனமாடுகிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்த ‘அவரச தாலாட்டு’ பாடல், ‘ரத்த தானம்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. வேலைக்குப் புறப்படும் ஒரு தாய், தன் பிள்ளைக்குப் பாடும் தாலாட்டு. பிள்ளையின் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் அந்தத் தாய்க்கு வேலையின் பொருட்டு, காலை முதல் மாலை வரை பிள்ளையைப் பிரிந்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த வேளையில், உனக்கு என்னவெல்லாம் துணையாக இருக்கும் என குழந்தைக்குச் சொல்வதாக உருக்கத்துடன் இதன் வரிகள் எழுதப்பட்டிருக்கும். அவை…
சோலைக்குப் பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்குப் போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு!
அலுவலகம் விட்டு –
அம்மா வரும் வரைக்கும் –
கேசட்டில் தாலாட்டு – கேட்டபடி கண்ணுறங்கு!
ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் – விழி சாத்தி நீயுறங்கு!
9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை –
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை –
ஆயாவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் –
தூக்கத்தைத் தவிர துணைக்கு வர யாருமில்லை!
20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இதுதான் கதியென்று – இன்னமுதே கண்ணுறங்கு!
தூரத்தில் இருந்தாலும் தூயவளே –
உன் தொட்டில் ஓரத்தில் –
என் நினைவு – ஓடிவரும் கண்ணுறங்கு!
பேருந்தில் நசுங்கி, பிதுங்கிப் போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது முகம் புறப்பட்டு வரும் கண்ணே!
தந்தை வந்து கொஞ்சுவதாய் –
தங்க மடியில் தூங்குவதாய் –
கண்ணே கண்மணியே – கனவு கண்டு – நீயுறங்கு!
புட்டிப்பால் குறையவில்லை –
பொம்மைக்கும் பஞ்சமில்லை –
தாய்ப்பாலும் தாயும் இன்றி –
தங்க மகனுக்கு என்ன குறை?
மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!
தாலாட்டுப் பாட்டில் தளிரே – நீ
தூங்கிவிட்டால் கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!
உறவுக்குத் தடையாக
‘ஓ’ என்று அலறாமல் –
இரவுக்கும் மிச்சம் வைத்து
இப்போது – நீ உறங்கு!
தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுக்கிழமை வரும் – நல்லவளே கண்ணுறங்கு!
படிக்கும்போதே நெகிழ்வைத் தரும் இந்தத் தாலாட்டுக்கு, ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடுகிறார். நிகழ்ச்சியின் இறுதியாக, உலக அமைதிக்காக ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடிய பாடலுக்கும் நடனமாடுகிறார்.