மைதானத்தில் ஆக்ரோஷமாக ஆடும் வீரர், எதிரணி வீரர்களை வசைபாடுவதில் வல்லவர், களத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் தோல்விகளில் அழுதும், வெற்றிக் களிப்பில் ஆர்ப்பரித்துக் கொண்டாடும் விராட் கோலியின் பெண்கள் தின வாழ்த்து என்ன தெரியுமா? அவர் தன் வாழ்வில் சிறப்பாக செயல்பட உந்துதலாக இருந்த இரண்டுப் பெண்களைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் பற்றி எப்போதுமே அதிக அக்கறைகொண்டவர் விராட் கோலி.
பெங்களூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்பட்டபோது, தனது ட்விட்டர் பக்கத்தில் குரல் கொடுத்தவர்.
பெண்களால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் எனக் கூறுவது இன்று நிறைய ஆண்களிடம் காண முடிகிறது.
அதற்கு விராட் கோலியும் விதிவிலக்கல்ல.
இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தாயுடனும், தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடனும் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, ‘இவர்கள் இருவரும் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்’ என்று கூறியிருக்கிறார்.
இவர்களைப் பெண்கள் தினத்தில் வாழ்த்தக் கடமைப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
விராட் கோலி செய்வது இப்படிச் செய்வது முதல்முறை அல்ல. காதலர் தினத்தன்று அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ”அனுஷ்கா விருப்பப்பட்டால் 365 நாளுமே காதலர் தினம்தான்’ என்று கூறியுள்ளார்.
என்னதான் பிரேக் அப், கிண்டல் மீம்ஸ் என கோலி – அனுஷ்கா சுற்றி வளைக்கப்பட்டாலும், கிரிக்கெட்டில் கெத்தான பேட்ஸ்மேனாக கோலியும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக அனுஷ்காவும் தொடர்கிறார்கள்.
காதல் எந்த விதத்திலும் கேரியரைப் பாதிக்கவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டினார்கள்.
டி20 உலகக் கோப்பையின்போது, விராட் அவுட் ஆனதற்கு அனுஷ்காவை விமர்சித்த ரசிகர்களுக்கு ‘ஷேம்’ என ட்வீட் செய்து, உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
‘கேலி செய்பவர்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு எல்லாமே அனுஷ்காதான்’ எனப் பதில் தந்தார்.
அதுதான் இந்தியாவின் ‘ட்வீட் ஆஃப் தி இயர்’ என ட்விட்டரே அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஜனவரி 1, 2017-ல் அனுஷ்காவுக்கும் கோலிக்கும் நிச்சயதார்த்தம் என வதந்தி பரவியது.
‘வதந்திகளை நம்பாதீர்கள். எனக்குத் திருமணம் என்றால் நானே அறிவிப்பேன்’ என்றார் விராட். அனுஷ்காவுக்கும் இதே பிரச்னைதான்.
அவர் தயாரிக்கும் பாலிவுட் படமான ‘பில்ஹூரி’ படத்தை மறைமுகமாகத் தயாரிப்பது விராட்தான் என்பதற்கு, கோபப்பட்டு விளக்கம் அளித்தார் அனுஷ்கா.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ‘சரோஜ்’ என்ற தனது தாயின் பெயரை டிஷர்ட்டில் எழுதி, தனது தாய் மீதான அன்பை வெளிப்படுத்தினார் விராட்.
கிரிக்கெட் ஆடுகளத்தில் சதம் அடிப்பதில் தெறி பாய் என்றால், பெண்களிடம் மரியாதைக்குரிய குட் பாயாக செஞ்சுரி அடிக்கிறார் விராட். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பெண்களை மதிக்கும் ஆண்களுக்கும் விராட் ஒரு ரோல்மாடல்.