அரசாங்க வைத்தியசாலைகளிலும் விசேட நிபுணத்துவ வைத்தியர்களின் ஆலேசானை (செனலிங்) சேவை வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் பிற்பகல் 4.00 மணியின் பின்னர் பணம் செலுத்தி வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ளவும், சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவும் கூடிய வகையிலான புதிய முறையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான உபகரணங்களின் பாவனைக் காலம் மூன்று ஆண்டுகள் வரையிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளில் குறித்த உபகரணங்கள் 24 மணித்தியாலங்களிலும் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 300 மில்லியன் பெறுமதியான MRI ஸ்கேன் இயந்திரமொன்று வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிகவும் குறைந்த கட்டணத்தில் விசேட நிபுணத்துவ வைத்தியர்களின் செனலிங் சேவையையும் சத்திர சிகிச்சை சேவைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதேவேளை, புதிய முறையின் மூலம் சுகாதார அமைச்சிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க முடிவதுடன், மக்களுக்கும் சேவையாற்ற முடியும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.