ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரவது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதனால் அ.தி.மு.க.வில் ஒரு பிரிவு தொண்டர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து அவர் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பையும் தொடங்கினார். அதை அரசியல் கட்சியாக மாற்றி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் சசிகலா தரப்பு ஒரு அணியாகவும், ஓ.பி.எஸ். தரப்பு மற்றொரு அணியாகவும் உள்ளது. தீபாவும் 3வது அணியை ஆரம்பித்ததால் அ.தி.மு.க. தொண்டர்கள் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு போயஸ்கார்டனுக்கு செல்லும் தொண்டர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரும்பாலான தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்க தொடங்கினர். அதே போல் தீபா வீட்டுக்கு வந்து ஆதரவளித்த தொண்டர்களும் பலர் ஓ.பி.எஸ். அணிக்கு மாறி விட்டனர்.
இதற்கிடையே தீபா தனது பேரவைக்கு நிர்வாகிகளின் முதல் பட்டியலை அறிவித்தார். அதற்கு அவரது ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தீபா வீட்டு முன்பு போராட்டங்களும் நடைபெற்றன.
இதற்கிடையே தீபா வீட்டுக்கு வரும் தொண்டர்களிடம் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ முக்கிய நிர்வாகி ஒருவரே கருத்துக்களை கேட்டுவந்தார். தொண்டர்களின் கருத்துக்களை அவரே தீபாவிடம் தெரிவித்தார். இதை தீபா ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தீபா தினமும் தங்களை பார்க்க வேண்டும், தங்களின் கருத்துக்களை நேரடியாக கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து தொண்டர்களை தினமும் சந்தித்து அவர்களின் கருத்தை கேட்க இருப்பதாக தீபா அறிவித்தார். அதன்படி கடந்த 6-ந் தேதியும், 7-ந் தேதியும் அவர் தொண்டர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டார். தொண்டர்கள் தனித்தனியாக 2 நிமிடம் அவரிடம் கருத்துக்களை எடுத்துக்கூறினார்கள்.
இந்த நடைமுறை 2 நாட்கள் மட்டுமே நீடித்தது. நேற்று அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இதனால் தீபா ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி தமிழகம் முழுவதும் ஓ. பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். தீபா வீட்டுக்கு தினமும் வரும் அவரது ஆதரவாளர்கள் பலரும் ஓ.பி.எஸ். உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
ஓ.பி.எஸ்.க்கு தினமும் ஆதரவு பெருகி வருவதால் தீபா ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் பேரவையில் இருந்து விலகி ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையே தொண்டர்களை தினமும் சந்திக்கும் முடிவில் இருந்து தீபா பின்வாங்கியிருப்பதால் மீதம் உள்ள தீபா ஆதரவாளர்களும் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து தீபா ஆதரவாளர்கள் இன்று ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தீபா பேரவையை கலைத்து ஓ. பன்னீர் செல்வம் அணியில் சேரலாமா என்று ஆலோசித்து அவர்கள் முடிவு எடுக்க உள்ளனர்.
தீபா பேரவை ஆதரவாளரான சேலத்தை சேர்ந்த கோட்டை பாபு மற்றும் முன்னாள் கவுன்சிலர் கர்ணன் ஆகியோர் தலைமையில் தீபா ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தீபா அணியில் இருந்து விலகி பன்னீர் செல்வம் அணி சார்பில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் கொண்டலாம் பட்டி, சூரமங்கலம் பகுதியை சேர்ந்த தீபா ஆதர வாளர்களில் பெரும்பாலான நிர்வாகிகள் நேற்று நடந்த உண்ணாவிரத போராட் டத்திற்கு ஆதரவு அளித்து பன்னீர்செல்வம் அணிக்கு தாவியதால் உண்ணா விரத பந்தலில் பெரும் பரபரப்பு நிலவியது.
தீபா பேரவையில் இருந்து பன்னீர்செல்வம் அணிக்கு தாவிய முன்னாள் கவுன்சிலர் கர்ணன் கூறியதாவது-
ஜெயலலிதாவின் மீது அக்கறை, பாசம் கொண்டவர்களுடன் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.
இன்று ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க தீபா பேரவை மேலிட பொறுப்பாளர்களிடம் அனுமதி கேட்டோம். அதில் பங்கேற்க வேண்டாம் என்று அவர்கள் கூறினர். இது ஜெயலலிதாவுக்காக நடைபெறும் போராட்டம்.
தீபா அணியில் உள்ளவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்காமல் யாருக்கு ஆதரவு அளிக்க முடியும் என்பதால் பல வார்டு நிர்வாகிகள் கூண்டோடு அணி மாறி உள்ளோம். மேலும் பலர் தீபா பேரவை யில் இருந்து விலகி தமிழ கத்தில் உண்மையான அ.தி.மு.க.வாக உருவாகி வரும் பன்னீர்செல்வம் அணிக்கு வர முடிவு செய்துள்ளனர்.
தீபா பேரவையை நாங்கள் தொடங்கி பல லட்சம் செலவு செய்தோம். ஆனால் உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல் யார்- யாருக்கோ பதவி கொடுக்கிறார்கள். இதனால் தீபா மேல் இருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.