எஸ்.ஆர்.பிரபாரகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘சத்ரியன்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளதோடு, இந்த ஆண்டு நாங்கள் பார்த்ததிலேயே ஒரு முழுமையான படம் இதுதான் என்று ‘சத்ரியன்’ படத்துக்கு பாராட்டு மழையும் கொடுத்திருக்கின்றனர். தணிக்கை குழுவினரின் இந்த பாராட்டு தங்களது படைப்புக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக படக்குழுவினர் கருதுகின்றனர்.