Loading...
பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் பிராண்டினை துவங்க இருக்கிறார். பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் தனது பிராண்டிற்கான சின்னத்தை சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.
பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட்போன் சந்தையின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிர்வாகிகளை சேர்ந்த புதிய குழு ஒன்றை உருவாக்கி வருவதாக சாம்சங், மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களை சேர்ந்த இரு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆடைகளை விற்பனை செய்ய பீயிங் ஹியூமன் என்ற பிராண்டினை சல்மான் கான் ஏற்கனவே நிர்வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்தின் கீழ் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க சீனாவை சேர்ந்த ஆலையை ஏற்கனவே தேர்வு செய்துள்ளதாகவும், இவற்றில் ரூ.20,000-க்கும் குறைந்த விலையிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் சல்மான் கானின் பீயிங் ஸ்மார்ட் நிறுவனம் ஒப்போ, விவோ மற்றும் சியோமி உள்ளிட்ட சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் போட்டியிடும். இதே போல் மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களும் பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் என பீயிங் ஸ்மார்ட் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும். பின்னர் ஒப்பந்த அடிப்படையில் சில்லறை வர்த்தகர்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இது குறித்து சல்மான் கான் சார்பில் எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
Loading...