ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. பல்வேறு தடைகளை தாண்டி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இப்படத்திற்கு திரையரங்கிலும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று அடைமொழி கொடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கான தனி அமைப்பு, இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஆதரவற்றோர்களுக்கு காப்பகம் என மக்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.
ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்தனி அடைமொழி வைத்து அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் வரிசையில் லாரன்ஸ் தற்போது மக்கள் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாய் ரமணி இயக்கியுள்ள இப்படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், அசுதோஷ் ராணா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.