இவ்வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பில் பிரித்தானியா அக்கறை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரித்தானிய பொருளாதாரம் தொடர்பில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அரசாங்கம் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹெமொன்ட் 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை தயாரித்ததன் பின்னரே மேற்குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான செயற்பாடுகளை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆரம்பிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையிலேயே குறித்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த பிலிப் ஹெமொன்ட், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது என தீர்மானம் மேற்கொண்டாயிற்று. எனவே அதற்கு பின்னரான நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே குறித்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் பொருளாதாரம் இவ்வருடம் 0.2 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.