கனடாவின் அல்பேர்ட்டா பகுதியில் குழாய் நீரை சுத்திகரிக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, குறித்த நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
அல்போர்ட்டா பகுதியில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) நீரில் உள்ள ஹைட்ரஜன் சல்பைட்டை (Hydrogen sulphide) சுத்திகரிக்கும் பொருட்டு, போற்றாசியம் பேர்மங்கனைற்று (Potassium permanganate) உபயோகிக்கப்பட்டதாகவும் அதன் விளைவாக குழாய் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழாய் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியமை குறித்து பல பொதுமக்கள் முறைப்பாடு செய்ததை தொடர்ந்தே உரிய அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் அவர்கள் குழாய் நீரை பயன்படுத்த முடியாது அவதியுற்றதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அல்பேர்ட்டா மேயர், “குழாய் நீரின் நிறம் மாறியமை தொடர்பில் பொதுமக்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
குறித்த இரசாயனப் பொருள் தோலில் படும் சந்தர்ப்பத்தில் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.