அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது.
இச்சம்பவம் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் யாழ். வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வீட்டின் பின் பக்க கதவினை உடைத்து நேற்று அதிகாலை வேளையில் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர டங்கிய கும்பலொன்று வீட்டிலுள்ளவர்களைத் தாக்கிவிட்டு தாலிக்கொடி, சங்கிலி உட்பட 13 பவுண் தங்க நகைகளும் ஒரு தொகை பணம் மற்றும் வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளது.
எனினும் வீட்டில் இருந்து அபகரித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வீட்டில் இருந்த சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள அடர்ந்த பற்றைக் காட்டிற்குள் உள்ள வீதியில் அநாதரவான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது சத்தம் கேட்டு விழிப்படைந்த வீட்டு உரிமையாளரான மகாதேவன் ரோச் வெளிச்சத்தில் பார்த்த போது கொள்ளையர்களில் ஒருவன் அவரது கழுத்தில் வாளால் வெட்டியுள்ளான்.
இதன்போது அவர் ரோச் லைட்டினால் கொள்ளையனை தாக்கியுள்ளார்.
இதனால் கொள்ளையர்களில் இன்னொருவர் அவரது முதுகுப்பகுதியில் வாளால் வெட்டியுள்ளார்.
இதனால் நிலை குலைந்து அவ்விடத்திலேயே அக்குடும்பஸ்தர் விழுந்துள்ளார்.
பின்னர் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர் வீட்டு உரிமையாளரின் மனைவியான இராஜேஸ்வரியை வாளால் வெட்டிய போது அவர் தனது கையினால் தடுத்த போது கையில் பலத்த வெட்டுக் காயத்துக்கு இலக்காகினார்.
அத்துடன், குறித்த பெண்ணை பொல்லுகளால் கொடூரமாக தாக்கி அவர் அணித்திருந்த தாலிக்கொடி, சங்கிலி, தோடு என்பவற்றை அபகரித்துள்ளனர்.
அதன் பின்னர், வீட்டினை சல்லடை போட்டுத் தேடி ஒரு தொகைப் பணத்தினை அபகரித்ததோடு அவர்களில் வீட்டுடன் சேர்ந்து காணப்படும் விற்பனை நிலையத்திற்குள்ளும் புகுந்த திருடர்கள் அங்கும் தமது தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பரவலாக சிதறிக்காணப்பட்டது.
பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அயலவர்களுக்கு சம்பவம் பற்றி தெரியவந்ததனை அடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண் டதுடன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்கு நேற்று நண்பகல் மோப்ப நாய் சகிதம் வருகை தந்த நிலையில் அபகரித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளும் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வசாவிளான் கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த பகுதியில் நிகழ்ந்துள்ள கொடூர வாள்வெட்டுடன் கூடிய கொள்ளைச் சம்பவத்தினால் அப்பகுதியில் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
துணிகரமாக இடம்பெறும் வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு பொலிஸார் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.