வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி ஹிக்கடுவ, சீனிகம கோவிலை தனது வீடு எனக் கூறி விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹிக்கடுவ கடல் கரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழமையாகும். அங்கு வந்த ஜேர்மன் நாட்டவர் ஒருவர் மோசடியான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்று சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மன் நாட்டவர் சார்பாக வாதிடும் சட்டத்தரணி, மோசடியின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். கடற்கரையில் அமர்ந்திருந்து கடலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, அங்கிருந்த ஜேர்மன் நாட்டவர் ஒருவர் அவதானித்துள்ளார். இரண்டாவது நாள் இந்த ஜேர்மன் நாட்டவர் ஹிக்கடுவ கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போதும் அந்த இளைஞர் கடலை நோக்கி பார்த்துக் கொண்டுடிருந்தார். ஏனையோர் கடலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்த இளைஞன் மட்டும் கடலை பார்த்துக் கொண்டிருப்பது ஜேர்மன் நாட்டவருக்கு கவலையை ஏற்படுத்தியது.
அடுத்த நாள் கடற்கரைக்கு சென்ற வெளிநாட்டவர், குறித்த இளைஞருடன் கலைந்துரையாடல் மேற்கொண்டுள்ளார். அந்த இளைஞனுக்கு நன்கு ஜேர்மன் மொழி பேசத் தெரியும். “நான் உங்களை சில நாட்களாக அவதானிக்கின்றேன். ஏன் நீங்கள் கடலை பார்த்து யோசிக்கின்றீர்கள்” எனக் கேட்டுள்ளார்.
“அந்த கடலுக்கு மத்தியில் உள்ள வீடு உங்களுக்கு தெரிகின்றதா? அந்த வீடு என்னுடைய தந்தையின் வீடாக தான் காணப்பட்டது. எனது அம்மா உயிரிழந்து அதிக காலம் செல்லவில்லை. அம்மா இன்றி தந்தை கடுமையாக பாதிக்கப்பட்டார். பொருளாதார பிரச்சினைகள் பல ஏற்பட்டன. தந்தை தொழில் செய்த பணத்தை பொலிஸார் எடுத்து சென்றுவிட்டனர். இறுதியாக தந்தையினால் கடன் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வருவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். தந்தையை வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள். தந்தை கடலுக்கு மத்தியில் உள்ள வீட்டை வங்கியில் அடகு வைத்து விட்டார். தற்போது அந்த வீடு ஏலத்தில் விடப்படவுள்ளது. இது குறித்து தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்…” என குறித்த இளைஞர் ஜேர்மன் நாட்டவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞனின் கதையை கேட்ட ஜேர்மன் நாட்டவருக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. அந்த இளைஞரின் மனதை சமாதானப்படுத்தி விட்டு, கவலைப்படாதீர்கள், வீட்டை காப்பாற்றி விடலாம் என ஆறுதல் கூறினார்.
வீட்டை காப்பாற்றி விடலாம். எனினும் சிறிது காலம் மாத்திரமே உள்ளது. வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும் என அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளான். சரி கவலைப்பட வேண்டாம் என நான் உதவுகின்றேன். என ஜேர்மன் நாட்டவர் கூறியதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நெருக்கமான நட்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் இந்த இளைஞன் தற்போது தங்கியுள்ள வீட்டிற்கு ஜேர்மன் நாட்டவரை அழைத்து சென்றுள்ளார். அந்த வீட்டின் வாசலில் இளைஞனின் புகைப்படம் ஒன்று ஓட்டப்பட்டிருந்தது. வயோதிபர் ஒருவரை தந்தை என அந்த இளைஞன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளான். தங்கள் சொத்துக்கள் வங்கியில் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக வயோதிப நபர், ஜேர்மன் நாட்டவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்த இளைஞரின் குடும்ப தகவலைப் பெற்றுக் கொண்டதனை தொடர்ந்து ஜேர்மன் நாட்டவருக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வீட்டை காப்பாற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றேன். தற்போது என்னிடம் பணம் இல்லை. ஜேர்மனுக்கு சென்று பணம் அனுப்புகின்றேன் என கூறிய ஜேர்மன் நாட்டவர் இளைஞரிடம் அவரது வங்கி கணக்கிலக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அவர் அந்த கடலுக்கு நடுவில் காணப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். கடலுக்கு நடுவில் இப்படி ஒரு இடத்தை நான் என்றும் பார்த்ததில்லை. மிகவும் அழகான இடம் என கூறிய ஜேர்மன் நாட்டவர், தனது நாட்டிற்கு சென்று வீட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக பணத்தின் ஒரு பகுதியை இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலதிக பணத்தை இலங்கைக்கு வரும் போது கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார். இந்த வீட்டை ஜேர்மன் நாட்டவரின் பெயரில் மாற்றுவதற்கு இவர்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டவர் ஜேர்மனில் தனக்கு நெருக்கமானவர்களிடம் கடலுக்கு நடுவில் உள்ள இந்த வீடு குறித்து கூறியுள்ளார். அது மிகவும் அழகானது. நான் அவ்வாறான ஒரு இடத்தை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டவர்களை அழைத்து சென்று அங்கு ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அந்த ஜேர்மன் நாட்டவரின் நோக்கமாகும்.
அவர் பாரிய எதிர்பார்ப்புகளுடன், தனது மனைவியுடன் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று அவர் சந்தித்த குறித்த நாட்டவர் மீதிப் பணத்தையும் வழங்கிவிட்டு, தற்போது அந்த வீட்டை காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த ஜேர்மன் நாட்டவர் கூறியுள்ளார். இந்நிலையில், சரி இந்த வீட்டை தற்போது உங்கள் பெயரில் எழுதிக் கொடுக்கவுள்ளோம் என இளைஞர் கூறியுள்ளார். குறித்த இலங்கை இளைஞர் சந்கேத்திற்குரிய நபராகும். அவர் இதற்கு முன்னரும் வெளிநாட்டவர்கள் பலரை ஏமாற்றியுள்ளார்.
இந்த இளைஞர் தன்னை ஏமாற்றுகின்றார் என இறுதி வரை அந்த ஜேர்மன் நாட்டவர் அறிந்திருக்கவில்லை. அந்த இளைஞர் தனது வீடு என கடலுக்கு நடுவில் இருந்த சீனிகம கோவிலையே காட்டியுள்ளார். ஜேர்மன் நாட்டவர் இது கோவில் என்பதனை அறியாமல் கடலுக்கு நடுவில் உள்ளது வீடு என்ற கனவில் இருந்து விட்டார்.
இவை ஒன்றையும் அறியாத ஜேர்மன் நாட்டவர் தனது மனைவியுடன் படகு ஒன்றில் சீனிகம கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று இந்த இடத்தை தான் கொள்வனவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுவொரு வீடு அல்ல இது கோவில், கடவுளை வணங்கும் இடமாகும் என அங்கிருந்த ஒருவர் ஜேர்மன் நாட்டவரிடம் கூறியுள்ளார். எனினும் ஜேர்மன் நாட்டவர் அதனை நம்பவில்லை. பின்னர் குறித்த இளைஞரை தேடி அவர் சென்றுள்ளார்.
எனினும் அந்த வீட்டில் இளைஞர் மற்றும் வயோதிபரை காணவில்லை. அந்த இளைஞர் ஜேர்மன் நாட்டவரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது கடந்த 7 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என தற்போது சட்டத்தரணி துஷார தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் நாட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் அதன் வழக்கு தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.