வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் இன்று அதிகாலை முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அண்மித்ததாக பயணித்துக் கொண்டிருந்த போது பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த கொழும்பு மோதரையைச் சேர்ந்த 56 வயதுடைய கந்தையா மாரியாயி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் மகளின் பிள்ளைகளான 2 வயதான டிலானி மற்றும் 7 வயதான டெனுசன் ஆகிய இரு சிறுவர்களும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதியும், காயமடைந்த இரு சிறுவர்களின் தாயாரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துவருகின்றனர்.