வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க இரண்டு ஆண்கள் காத்திருக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது.
எனினும், ஐ.நா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி பொது மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைக்க முடியாது. அவ்வாறு காணிகளை கையகப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த காணிகளில் தேவைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், காணிகளுக்கு சொந்தமான பொது மக்கள் வீதியில் போராடுகின்றனர்.
எனவே, படையினர் வசமுள்ள காணிகளை விரைவில் விடுவிக்க வேணடும் என இரா. சம்பந்தன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.