இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் சில தினங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் மனித உரிமைகள் பேரவைக்கு விரிவான விபரங்களை சமர்ப்பிக்கும் என்றுஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வின் மனித உரிமை அலுவலகத்தின் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அல் ஹூசைன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை நேற்றைய தினம் அளித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக சில தினங்களில் விரிவான விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதால் அது தொடர்பில் வருடாந்த அறிக்கையில் ஆழமாக ஆராயவில்லையென குறிப்பிட்டார்.
அவர் அங்கு குறிப்பிடுகையில்:-
இன்றைய எனது வருடாந்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட ஒரு சில நாடுகளின் மனித உரிமைகள் குறித்து விபரமான விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை.
காரணம் இந்த 34 ஆவது கூட்டத் தொடரின் போது ஐ.நா. மனித உரிமை அலுவலகமானது இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் மனித உரிமை தொடர்பாக விரிவான விபரங்களை ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
அதனால் இன்றைய எனது அறிக்கையில் இலங்கை தொடர்பான விபரமான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றார்.
கடந்த 27ம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் எதிர்வரும் 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி இலங்கை தொடர்பான செயிட் அல் ஹுசைனின் அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அந்த விவாதத்தின் பின்னர் எதிர்வரும் 23ம் திகதி இலங்கை தொடர்பாக பிரிட்டன் கொண்டு வரவுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்தப் பிரேரணையானது இலங்கையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் மேலும் முன்னேற்றங்களை வெளிக்காட்டுவதற்காக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதற்கான பரிந்துரையை உள்ளடக்கியிருக்கும் என ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.
செயிட் அல் ஹூசைன் கடந்த வாரம் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டிருந்ததுடன் நல்லிணக்க செயற்பாடுகள் கவலையளிக்கும் வகையில் மெதுவாக இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.