மிகப்பெரும் காடழிப்பை செய்த பிரதான சூத்திரதாரிக்கு வடமாகாண முதலமைச்சரின் கைகளாலேயே “சிறந்த விவசாயி” விருது வழங்கப்பட்டதா? தாம் விருது வழங்கி கௌரவித்த நபர் காடழிப்பை செய்த சூத்திரதாரி என்பதை முதலமைச்சர் அறிவாரா? என மாகாண விவசாய அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பபட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற வடமாகாண சபையின் 86ம் அமர்விலேயே மேற்படி கேள்வி எழுப்பபட்டுள்ளது. மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், சிறந்த விவசாயி தெரிவு எப்படி செய்யப்பட்டது, அடாத்தாக காடழித்து அதில் அடாத்தாக விவசாயம் செய்த நபருக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டது உண்மையா..?
முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து தடுத்து நிறுத்திய காடழிப்பு நடவடிக்கையின் சூத்திரதாரிக்கு முதலமைச்சர் கைகளால் விருது வழங்கப்பட்டுள்ளது.
தாம் விருது வழங்கி கௌரவித்த நபர் மிகப்பெரிய காடழிப்பை செய்தவர் என்பது முதலமைச்சருக்கு தெரியுமா? அதிகாரிகளே இந்த தெரிவை செய்திருந்தால் அமைச்சரே உங்கள் பொறுப்பு என்ன?
முல்லைத்தீவில் 5 மாகாண சபை உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்களுடன் இது தொடர்பாக சிறயளவிலும் பேசாமை எதற்காக? காடழிப்பை வடமாகாண சபை ஊக்குவிக்கின்றதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அடுத்த அமர்வில் இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதாக கூறியுள்ளார்.