போரில் ஈடுபட்டு மரணித்த இலங்கை படையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவர்களது மனைவிமார்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதுவுமே இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சர்தேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட மாநாடு இன்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு கருத்துரைத்த அவர்,
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நாட்டில் உள்ளனர். அதிகமானவர்கள் தமிழ் பெண்களாவர். அதேபோல முஸ்லிம் பெண்களும் உள்ளனர். போரில் ஈடுபட்டு மரணித்த ஸ்ரீலங்கா படையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவர்களது மனைவிமார்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதுவுமே இல்லை. படையினரின் மனைவிமார்களுக்கு வேறு பிரச்சினைகளும் உள்ளன. யாராவது இதற்கு தலைமை தாங்கி தீர்வுபெற்றுக் கொடுக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் மகளிர் விவகார அமைச்சின் ஊடாக பெண்களின் அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கிறது. இவற்றில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகிய பிரிவினர் மீது செலுத்தப்படும் கரிசணை போதாது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மகளிர் விவகார அமைச்சு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களில் இதுதொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்துவது குறைவடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் வடக்கில் உள்ள பெண்கள் குறித்து அதிக கரிசணை கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.