பங்குனி உத்திரம் விரதத்தை எப்படி இருக்க வேண்டும்? எந்த நேரத்தில் பங்குனி உத்திரம் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகனின் அருள் கிடைக்கும்? எந்த மந்திரம் சொல்லி வழிபட வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
பங்குனி உத்திரம் என தெய்வீக திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாளாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மிகவும் சிறப்புக்குரிய நாளாகும்.
தமிழ் வருடங்களில் தற்போது நடைபெறும் குரோதி வருடத்தில் முருகப் பெருமானுக்கு கடைபிடிக்கப்படும் கடைசி விரதம் பங்குனி உத்திரம் விரதமாகும்.
பங்குனி உத்திரம் விரதம் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி வைக்கும் அற்புதமான விரதமாகும். குறிப்பாக திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், முருகன் அருள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றத் தரும் அற்புதமான விரதமாகும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஏப்ரல் 10ம் திகதி பகல் 02.07 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 11ம் திகதி மாலை 04.11 மணி வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது.
வழக்கமாக பங்குனி மாத பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரம் வரும் நாளை தான் பங்குனி உத்திரமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி பங்குனி உத்திரமும், ஏப்ரல் 12ம் திகதி பங்குனி பெளர்ணமியும் அமைந்துள்ளது.
பங்குனி உத்திரம், உத்திரம் நட்சத்திரத்தை அடிப்படையாகக் வைத்து கொண்டாடப்படும் விரதம் என்பதால் உத்திரம் நட்சத்திரம் இருக்கும் ஏப்ரல் 11ம் திகதியையே பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் ஏப்ரல் 11ம் திகதி காலையிலேயே விரதத்தை துவக்கி விட வேண்டும். மாலை 7 மணிக்கு பிறகு முருகப் பெருமானை வழிபட்ட பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பங்குனி உத்திரத்திற்கு முருகனுக்கு பால்குடம் எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலையில் உணவு சாப்பிடாமல் இருந்து, பால்குடம் எடுத்து முடித்த பிறகு சாப்பிடலாம்.
விரதம் இருக்க முடியாதவர்களும், திருமணத்திற்காக பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்களும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கூட முருகன் சிலை, வேல் இருந்தால் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை வருவதால் அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை ராகு காலம். அதனால் அதற்கு முன்பான நேரத்தில் வழிபாட்டினை நிறைவு செய்து விட வேண்டும்.
காலை 9 மணி முதல் 10.20 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நேரத்தில் முருகப் பெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், தேன், திணை மாவு படைத்து வழிபடலாம். எதுவும் முடியாதவர்கள் 2 வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு மட்டும் வைத்து வழிபட்டாலே போதுமானதாகும்.
அவரவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ற திருப்புகழ் பாடலை பாடி வழிபடலாம். முருகனை வேண்டி விரதம் இருப்பவர்கள் வேல் மாறல், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி உள்ளிட்ட ஏதாவது பாடல்களை படித்து வழிபடலாம்.