ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.
‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.
இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ‘இன்ட்டிமேட்’ என்ற இசை சுற்றுலா மேற்கொண்டிருந்தார்.
அங்குள்ள முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர், பிரிட்டன் நாட்டிலும் தனது ‘இன்ட்டிமேட்’ இசை சுற்றுலாவை மேற்கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி லண்டன் நகரிலும், 24-ம் தேதி பிர்மிங்ஹம் நகரிலும், 29-ம் தேதி லீட்ஸ் நகரிலும், 30-ம் தேதி மான்செஸ்ட்டர் நகரிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘இன்ட்டிமேட்’ இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, வரும் 13-ம் தேதி சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்சிக்காக 5000 திர்ஹம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை கட்டணம் கொண்ட டிக்கெட்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சில நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்தில் சலுகை கட்டணத்தில் டிக்கெட்களை விற்று வருகின்றன. ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுவதால் டிக்கெட்டுகளை பெற இங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை மிகப்பெரிய இசைக்குழுவினருடன் பின்னணி பாடகர்-பாடகியர் பாடவுள்ளனர்.