தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் இருக்கக்கூடிய மரியாதைக்குரிய உறுப்பினர்களே! இக் கடிதம் உங்களுக்கு அவசரமாக எழுதப்படுகிறது.
கொடும்போரில் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதியும் உரிமையும் கிடைக்காமல் செய்வதற்கான சதித்திட்டம் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நடந்தேறவுள்ளது.
கால அவகாசம் வழங்குதல் என்ற பெயரில் இந்த சதி அரங்கேறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நல்லாட்சி என்று பெயர் சூட்டி, போர்க்குற்ற விசாரணைகளில் இருந்தும் தமிழ் மக்களிற்கு உரிமை வழங்குவதிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகள் ஜெனிவாவில் நடந்து வருகின்றன.
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொழும்புத்தலைமை ஆதரவாக செயற்பட்டு வருவது தமிழ் மக்களுக்கு தீராத ஆத்திரத்தையும் தாளாத வேதனையையும் தருகிறது.
இக்கட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கைப் பாராளுமன்றத்திலும் வடக்கு மாகாண சபையிலும் இருக்கக்கூடிய கெளரவ பிரதிநிதிகள் தர்மத்தோடும் நீதியோடும் நடந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
மதிப்புக்குரிய தமிழ்ப் பிரதிநிதிகளே! தங்கள் பிள்ளைகளை, பெற்றவர்களை, குடும்பத்தலைவர்களை, குடும்பத்தலைவியை, உடன்பிறந்த சகோதரர்களை பறிகொடுத்து கதறுகின்ற எங்கள் தமிழ்க்குடும்பங்களின் அவலங்களை ஒருகணம் திரும்பிப் பாருங்கள்.
காணாமல் போனவர்களின் உறவுகள் இன்று வரை கதறிக் கண்ணீர் விட்டு வீதியில் விழுந்து புலம்பி அழுது மன்றாடி எங்கள் பிள்ளைகள் எங்கே என்று கெஞ்சிக்கேட்டும் இன்று வரை எந்தப்பதிலும் வழங்காத நல்லாட்சியின் போக்கைப் பாருங்கள்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்று வரை விடுதலை வழங்க மறுக்கின்ற எங்கள் நாட்டு ஆட்சியின் நீதிபரிபாலனத்தின் அசமந்தத்தை நினைத்துப் பாருங்கள்.
சொந்த நிலத்தில் குடியமரக்கூட அனுமதி மறுக்கும் படையினரின் ஆக்கிரமிப்பின் கொடுமைத்தனத்தை காணுங்கள்.
இதுவே எங்கள் நிலைமை எனும்போது இலங்கை அரசுக்கு ஐ.நா கூட்டத்தொடரில் கால அவகாசம் வழங்குவது எந்த வகையில் நீதியாகும்?
ஆக, அன்புக்குரிய தமிழ்ப் பிரதிநிதிகளே!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கைப்பற்றி வைத்திருக்கக்கூடிய ஒரு சிலர் செய்கின்ற அநியாயத்திற்கு, அநீதிக்கு நீங்கள் உடன் போய் விடாதீர்கள்.
மாறாக, முடிந்தால் அவர்களுக்கு நீதியை எடுத்துச் சொல்லுங்கள். தர்மத்தை எடுத்தியம்புங்கள்.
தமிழ் மக்களின் அவலத்தை புரிய வையுங்கள். விலைபோன அவர்களை மீட்கப் பாருங்கள்.
முடியாவிடின் நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, ஐ.நாவே! இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்காதே என்று கோசம் போடுங்கள்.
உங்களை நம்பியிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்கின்ற அறம் – தர்மம் – நீதி இதுவாகவே இருக்கும்.