இலங்கை அரசின் ஏற்பாட்டில் கனடாவில் இருந்து வர்த்தகர் குழு ஒன்றை வர்த்தகர் விழா என்ற போர்வையில் இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் நடைபெறுவதாக கனடாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடிய தமிழர் சம்மேளனத்திற்கு போட்டியாக இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட கனடா இலங்கை வர்த்தக கவுன்சிலே இதன் பின்னணியில் இருந்து தொழிற்படுவதாக தமிழர் சம்மேளனப் பிரதிநிதி கூறியுள்ளார்.
கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரே இதன் முக்கிய புள்ளிகள் என்றும் ராஜபக்ச காலத்திலேயே இவர்கள் வெளிப்படையாக செயற்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில தமிழர்கள் இவர்களின் சதிவலைக்கு பலியாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெருமளவில் இணைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அது வெற்றி பெறவில்லை எனவும் தமிழ் அரசியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக்கேட்டுக் கொண்ட அவர் அண்மையில் உருவாக்கப்பட்ட கனடா தமிழர் பாராளுமன்றக்குழு இதற்கு சவாலாக அமைந்ததாகவும் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கனடியத் தமிழரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் விடயம் ஜெனிவாவில் முதன்மை பெற்றிருக்கும் நிலையில் அதனை மழுங்கடிக்கும் வகையிலேயே இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தமிழர் நலனில் அக்கறையுள்ள சிலரும் கூட துணைபோவது உச்சவேதனை தருவதாகவும் கூறியுள்ளனர்.
எங்கள் கைகளைக் கொண்டே எங்கள் கண்களைக் குத்த சிங்களத்தை அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.