ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினிகாந்த் நடித்த மற்றொரு படமான ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. இதனால், இரண்டு படங்களிலும் ரஜினி மாறி, மாறி நடித்து வந்தார். ‘கபாலி’ படத்தை முடித்த கையோடு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஓய்வுக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில்தான் எமி ஜாக்சன், தனது சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டதாக அறிவித்திருந்தார்.
இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த காட்சிகள் படமாக்கியவுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.
மேலும், ‘2.ஓ’ படத்திற்காக எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி படமானவுடன் படக்குழுவினருடன் ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த வருடம் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.