இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-
“திரைப்பட தொழிலில் பல கோடிகள் புரள்கிறது. ஆனாலும் படங்கள் ஓடுவதில்லை. புதிதாக தயாராகும் படங்களையும் திரைக்கு கொண்டு வர முடியவில்லை. கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளிக்கும் பெண்ணைப்போல் சினிமா உலகம் இருக்கிறது. அதை மன வேதனையோடும் இறுக்கமான மன நிலையிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
சினிமாவை காப்பாற்ற வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து படங்கள் எடுக்கலாம், வளரலாம் என்ற கனவுகளுடன் தான் தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. சினிமாவில் பணத்தை இழந்து நஷ்டமடைவது ஒரு புறம் இருந்தாலும் அவர்கள் ஏமாற்றப்படும் சூழ்நிலையும் இருக்கிறது.
திரைப்பட தொழில் நஷ்டத்தை போக்க தீர்வு காண வேண்டும். சினிமாவில் பழைய முறைகளை களைந்து புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பணம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஆர்.கே. டிக்கெட் விற்பவர்களுக்கு கமிஷன், குறிப்பட்ட டிக்கெட் எடுப்பவர்களுக்கு இலவச டிக்கெட் என்று படம் வினியோகத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த திட்டம் வெற்றி பெற வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.”
இவ்வாறு நாசர் பேசினார்.
பெப்சி தலைவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, “புதிய படங்கள் திரைக்கு வருவதை யார் யாரெல்லாமோ நிறுத்துகிறார்கள். கோர்ட்டிலும் தடை வாங்குகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் படம் திரைக்கு வரும் முன்பே நூதன வினியோக முறையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இருப்பதை தயாரிப்பாளர் சங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.