மும்பை ஜூகு பகுதியில் நடிகர் அமிதாப்பச்சனின் ‘ஜல்சா’ பங்களா வீடு உள்ளது. இங்கு அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அமிதாப்பச்சனின் வீட்டில் வாலிபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவர் அந்த வாலிபரை ஜூகு போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபரின் பெயர் ரகுமான் கான் (வயது 19) என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்காத் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
நோயால் பாதிக்கப்பட்ட இவரது சகோதரிக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. இந்தநிலையில் கஷ்டப்படுபவர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் உதவி செய்வதாக ரகுமான் கான் கேள்விப்பட்டு உள்ளார்.
எனவே அவர் நடிகர் அமிதாப்பச்சனை நேரில் சந்தித்து தனது சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி பெறலாம் என நினைத்து மும்பை வந்துள்ளார். பின்னர் அமிதாப்பச்சனின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரகுமான் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.