நிகழ்ச்சிக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புகைப்படங்களை திறந்து வைத்து, இறந்த 250 விவசாயிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். அனைத்து விவசாயிகளுக்கும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால், நடிகர் ஆதி, மெரினா போராட்டக்குழு இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் விஷால் பேசும்போது, ‘விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை நிகழாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தும், விவசாயத்துக்கு ஊக்கம் அளிப்பதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன்’ என்றார்.
பி.ஆர்.பாண்டியன் பேசும்போது, பயிர்கள் கருகியதை கண்டு 275 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வராததே இதற்கு காரணம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வழங்க வேண்டும் என்றார். பின்னர் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவை சந்தித்து மனுவை வழங்கினார்.