நடிகர், நடிகைகள் தங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கங்களை தொடங்கி, அதில் தங்களது படங்கள் மற்றும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இது அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்மை என்றாலும், மறுபக்கம் அவர்களுக்கு எதிராக திரும்பக்கூடிய நிலைமையும் உருவாகி வருகிறது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடைசியில், திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர் ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தது.
அதேபோல், மீண்டும் பரபரப்பை கிளப்பியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிவந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது. இறுதியில் அவருடைய டுவிட்டர் பக்கமும் யாரோ ஒருவரால் ஹேக்கிங் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, அந்த பக்கமும் மூடப்பட்டு விட்டது. பின்னர் மடோனா செபஸ்டியானும் தனது டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கும் போனி கபூர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கணக்கில் இருந்து ஒருசில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில் “லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் போஸ்டர் பகிரப்ட்டுள்ளது. அதில் ஒரு மொபைல் எண் கொடுக்கப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.