முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரசன்னம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோத்தபாயவின் அரசியல் பிரவேசத்தின் மூலம் இராணுவத்தினரை தூண்டிவிட்டு அதன் ஊடாக அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் சதித்திட்டம் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்க புலனாய்வு பிரிவு விசாரணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோத்தபாயவின் தலைமையில் செயற்படும் வியத்மக என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களுக்கமைய இந்த சந்தேகம் அதிகரித்துள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசாங்க பாதுகாப்பு பிரிவின் சில உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் தனிப்பட்ட பழி வாங்கல் நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் தற்போதுவரையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான உயர் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் கடந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணை நடவடிக்கை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளின் போது அந்த சம்பவங்கள் தொடர்பில் உறுதி செய்யக்கூடிய பல சாட்சிகள் குற்றப் புலனாய்வு பிரிவினாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஏற்பட கூடிய நிலைமையை ஆராய்ந்து பார்பதற்கு முன்னர் முப்படையினருக்குள் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தி, அதரசாங்கத்திற்கு எதிராக அவர்களை தூண்டிவிடும் நோக்கில் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்வதற்கான திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியத் மக என்ற அமைப்பு அண்மையில் நடத்திய மாநாட்டின் ஊடாக இதற்காக பாரிய தூண்டிவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக இந்த மாநாட்டில் ஓய்வு பெற்ற அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால், இராணுவத்தை, அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டு வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புலனாய்வு பிரிவு இந்த அமைப்பு தொடர்பில் முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.