ஜேர்மனியில் புகலிடம் கோரி வந்துள்ள அகதிகளுக்காக அந்நாட்டு அரசு கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ரூ.3 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலிற்கு நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜேர்மனியில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளுக்காக அரசு செலவிட்ட தொகை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் அகதிகளுக்காக 20 பில்லியன் யூரோ(32,33,21,66,20,000 இலங்கை ரூபாய்) அரசு செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தொகையானது ஜேர்மன் அரசாங்கத்தின் கடந்தாண்டு பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஜேர்மனியில் உள்ள Bavaria, Schleswig-Holstein, Hesse மற்றும் Berlin ஆகிய 4 மாகாணங்களில் அகதிகளுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுக்க அரசு சுமார் 7 பில்லியன் யூரோ செலவிட்டுள்ளது.
மேலும், ஜேர்மனியில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால் அரசாங்கத்திற்கு கூடுதலாக செலவினங்கள் ஏற்படும் என்பதால் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலிற்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, தாய்நாடுகளுக்கு விருப்பப்பட்டு திரும்பும் அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவி தொகையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
தற்போது தாய்நாடுகளுக்கு திரும்பும் ஒவ்வொரு அகதிக்கும் சுமார் 1,200 யூரோ வரை நிதியுதவி வழங்கப்பட்டு இலவச விமான பயணச்சீட்டும் ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.