ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள இரண்டு வருட கால அவகாசத்திற்கு ஆதரவு வழங்குவதா அல்லது இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் நான்கு மணிநேரத்திற்கு மேலாக கடும் வாதங்கள் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜெனீவா விவகாரம் மற்றும் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் இன்று காலை முதல் கூடி ஆராய்ந்து வருகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஜெனீவாவில் கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முதலில் விவாதிக்கப்பட்டது.
இதன்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்களும் திட்டவட்டமாக அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க நாம் ஆதரவு வழங்க முடியாது.
ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையால் மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தனர்.
இதன்போது 2009 முதல் இதுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் விளக்கமளித்திருந்ததுடன், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், அக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில மாகாணசபை உறுப்பினர்களும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.
எனினும் பெரும்பான்மையானவர்கள் கால அவகாசம் வழங்கப்பட கூடாது எனவும், ஏற்கனவே கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் காலஅவகாசம் வழங்கக் கூடாது என கடிதம் அனுப்பியதனை நியாயப்படுத்தியுமிருந்தனர்.
இதனையடுத்து உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படாது மதிய சாப்பாட்டு இடைவேளை 1.30 இற்கு விடப்பட்டு மீண்டும் 2 மணிக்கு ஆரம்பமாகிய கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.